×

கொரோனா பரவலுக்கு மத்தியில் இந்தியாவில் அதிகம்; 2020ல் நடந்த 679 தீவிரவாத தாக்குதலில் 567 பேர் பலி: அமெரிக்க வெளியுறவு துறை அறிக்கை

வாஷிங்டன்: கொரோனா பரவலுக்கு மத்தியில் இந்தியாவில் 2020ம் ஆண்டு அதிக தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன என்று அமெரிக்க வெளியுறவு துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய தீவிரவாத தாக்குதல் தொடர்பான அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், ‘கடந்த 2019ம் ஆண்டை காட்டிலும் 2020ம் ஆண்டில் கொரோனா பரவலுக்கு மத்தியில் இந்தியா அதிக தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொண்டது. இதில் 37 சதவீத தீவிரவாத தாக்குதல்கள் ஜம்மு - காஷ்மீரில் நடந்துள்ளது.

கடந்த 2020ம் ஆண்டில் 98 நாடுகளில் 10,172 தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. கடந்த 2019ம் ஆண்டு நடந்த தாக்குதல்களை காட்டிலும் கூடுதலாக 1,300 தாக்குதல்கள் நடந்துள்ளன. கடந்த 2020ம் ஆண்டு இந்தியாவில் 679 தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றில் 567 பேர் கொல்லப்பட்டனர். உலகளாவிய தீவிரவாத தாக்குதல்களில் 2 சதவீத இறப்புகள் (2020) இந்தியாவில் நடந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் இந்தியாவில் 655 தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. கடந்தாண்டு நடந்த அதிக தீவிரவாத சம்பவங்கள் நடந்த முதல் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா இருந்தாலும்,

இந்த தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் அடிப்படையில் பார்த்தால் முதல் பத்து நாடுகள் பட்டியலில் இந்தியா இடம் பெறவில்லை. ஆப்கானிஸ்தானில் 1,722 தீவிரவாத தாக்குதல், சிரியாவில் 1,322, காங்கோவில் 999 சம்பவங்கள் நடந்துள்ளன. தீவிரவாத அச்சுறுத்தல்களைத்  தடுப்பதில் இந்தியப் பாதுகாப்பு ஏஜென்சிகள் திறம்பட செயல்படுகின்றன,  இருப்பினும் உள்நாட்டு உளவுத்துறைக்கும், தகவல் பகிர்வுக்கும் இடையே  வேறுபாடு இருப்பதாக தெரிகிறது.

இந்தியாவில் நடந்த மொத்த தீவிரவாதத் தாக்குதல்களில் 44 சதவீதம் மாவோயிஸ்ட் அமைப்புகளாலும், 6 சதவீதம் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன்களும் பொறுப்பு ஏற்றுள்ளன. கிட்டத்தட்ட 29 சதவீத தீவிரவாத சம்பவங்களுக்கு எந்த அமைப்பும்  பொறுப்பேற்கவில்லை’ என்று தெரிவித்துள்ளது. இருப்பினும், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2020ம் ஆண்டில் ஜம்மு - காஷ்மீரில் 244 தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்த தரவுகளை இந்த ஆண்டு மார்ச் 23ம் தேதி நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ஜம்மு - காஷ்மீருக்கான 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர், அங்கு தீவிரவாத சம்பவங்கள் குறைந்துள்ளதாகவும், தீவிரவாத முகாம்கள் பாதுகாப்பு படையினரால் அழிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. இதுகுறித்து தேசிய பாதுகாப்பு ஆய்வாளர் சமீர் பாட்டீல் கூறுகையில், ‘கடந்த ஓராண்டாக கொரோனா பரவுவதைத் தடுப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டதால், உலகெங்கிலும் உள்ள தீவிரவாத குழுக்கள் தங்களது நடவடிக்கைகளை வலுப்படுத்தி உள்ளன. இந்தியாவை பொருத்தமட்டில் இடதுசாரி தீவிரவாத குழுக்கள் (மாவோயிஸ்ட்) அமைப்புகள் கொரோனாவை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டன’ என்றார்.


Tags : India ,US State Department , High in India amid corona spread; 569 killed in 679 terrorist attacks in 2020: US State Department report
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...